சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, "பாஜகவின் சார்பாகப் போட்டியிடும் உறுப்பினர்களும் இன்னும் ஒரு வாரம் கடுமையாக வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அறிகுறி தென்படுகிறது.
பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தின் உள்ளே மூன்று பெட்ரோல் வெடிகுண்டு போடப்பட்டுள்ளது. இந்த மாதிரியான வன்முறை திமுக ஆளும்போது நடந்திருந்தால் அது புதிதல்ல. ஏனெனில் செப்டம்பர் 2007 ல் திமுகவின் ஆற்காடு வீராசாமி அறிக்கை ஒன்றை விட்டு பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அலுவலகங்கள் ஒரே நாளில் தாக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் ரவுடித்தனம் என்பது இயல்பான ஒன்றுதான். இந்த தாக்குதல் மாநில அரசாங்கம் தலைமையிலே நடந்திருக்கிறது. இந்த தாக்குதல் நடந்த பின்பு அங்குள்ள காவலர்கள் தடயவியல் நிபுணர்களை வரவழைக்காமல் அவசரமாக வெடிகுண்டு வீசிய இடங்களைச் சுத்தம் செய்திருக்கின்றனர். இது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பினார்.
பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். இது 2007 அல்ல, 2007க்கு பிறகு பல இடங்களில் பாஜகவால் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்களது ஆட்களைக் கட்டுப்படுத்தி வையுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக்கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எந்தவித பிரச்சினையுமின்றி நடக்கத் திமுக உதவும் என நினைக்கிறேன். பல இடங்களில் கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்களை மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது.
எனவே தேர்தல் நல்ல முறையில் நடக்கும் என நினைக்கிறேன். இல்லையெனில் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். சில மதவெறி சக்திகள் இன்னும் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன" எனவும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: 'தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் அதிமுகதான் வெல்லும்!'