சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து சேவைகள் குறித்த வழிகாட்டுதல்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், "தீபாவளியின்போது சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வது வாடிக்கையான ஒன்று. இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் மூலம் சிறப்பு பேருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்காக நவ. 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரையிலும் பயணிகள் திரும்பி வருவதற்காக நவ. 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டு, அதற்காக ஆறு தற்காலிகப் பேருந்து நிலையங்களை உருவாக்கியுள்ளது.
அதனடிப்படையில் ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட் ஹில்ஸ், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி பட்டேல் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக கே.கே நகர் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்தும், திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.
திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள், ஜி.எஸ்.டி சாலை வழியாக தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
அதேபோல மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் போன்ற கிழக்கு பகுதி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்டவை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், பயணிகள் அனைவரும் கோவிட் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து எந்தெந்த வழித்தடங்களில் செல்லும் என்ற அறிவிப்புகளும் சென்னை போக்குவரத்துக் காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கோயம்பேடு சி.எம்.பி.டி பேருந்து நிலையத்திலிருந்து முன்பதிவு செய்த அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வந்தடையும்.
இந்தப் பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளும் இதே மார்க்கமாக தான் செல்லும் எனவும், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு கடற்கரை சாலையை நோக்கிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் பட்டேல் சாலை வழியாக போக்குவரத்து காவல் துறையின் ஒப்புதலுக்கு உள்பட்டு அனுமதிக்கப்படும் எனவும், ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, சி.எம்.ஆர்.எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே நகர் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றுவதைத் தவிர்த்து அதற்கு பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்தில் இருந்து ஏற அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பயணிகளும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு அதற்கேற்றார்போல் தங்களது பயணத்தை திட்டமிட்டு அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்? - ஆளுநர் ஆர்.என்.ரவி