தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யு.ஜி.சி. தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்து மனு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,
"தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் சுழற்சியில் சுமார் 2 ஆயிரத்து 423 பேரும், இரண்டாம் சுழற்சியில் சுமார் ஆயிரத்து 661 பேரும் மொத்தம் 4 ஆயிரத்து 84 நபர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக மாதத் தொகுப்பூதியம் ரூபாய் 15000 மட்டும் பெற்றுக்கொண்டு பணிபுரிந்து வருகி்ன்றோம். மிகக்குறைவான ஊதியத்தில் பணி புரிந்துவரும் அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களாகிய நாங்கள் கரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக அரசின் 144 தடை உத்தரவைப் பின்பற்றி குடும்பத்தோடு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழக்கூடிய அளவிற்கு பல்வேறு புதிய உத்திகளைக் கையாளும் அரசு, அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல், மே மாதங்களுக்கு அந்தந்த மாதங்களின் இறுதியிலேயே ஊதியம் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தமிழ் வளர்த்த மதுரையில் வாடும் கலைஞர்கள்: அரசின் கவனம் பெறுமா?