டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், ”குரூப் 2 ஏ தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சோதனை செய்யப்பட்டது.
அந்தச் சோதனையில் 2017ஆம் ஆண்டு குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 42 பேர் ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து மட்டுமே தேர்வாகியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை ஆய்வுசெய்ததில் அழியக்கூடிய மை எதுவும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கண்டறிய முடியவில்லை.
குரூப் 2 தேர்வினை எழுதி தற்போது பணியில் உள்ளவர்களின் பட்டியலை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளோம். காவல் துறையினர் சந்தேகப்படும் நபர்களை விசாரணைசெய்து முறைகேடு நடைபெற்றதை உறுதிசெய்ய வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வுமையங்களில் குறைந்தளவில் தேர்வர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். ஆனால் ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து மட்டும் 42 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இவர்கள் மீது சிபிசிஐடியில் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.