தமிழ்நாட்டில் தென்மேற்குப்பருவமழை முடிந்து வடகிழக்குப்பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதனை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி, தனக்குக் கீழ் செயல்படும் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை முழுவதிலும் 30 இடங்களில் மழையின் அளவைக் கண்காணிக்கும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் சுரங்கப்பாதைகள், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ள அளவை கண்காணிக்கும் 40 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடு மையத்தில் 60 ஊழியர்கள் சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களாகப் பிரிந்து 24 மணி நேரமும் சென்சார் கருவிகளை கண்காணித்து வருகின்றனர்.
குறுந்தகவல் மூலம் கடத்தப்படும் சென்சார் எச்சரிக்கை
மழையின் காரணமாக, சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில், நீரின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும்போது குறிப்பிட்ட மண்டலத்தின் முதன்மை அலுவலருக்கு ஒரு தன்னியக்க எச்சரிக்கை குறுஞ்செய்தியைப் பகிரும்.
அதைத்தொடர்ந்து அந்த மண்டல அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர். அதற்காக 570 மோட்டார்கள் மற்றும் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்து செயல்படும் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்துடன் இணைந்து தொலைபேசி உதவி எண்கள் வழியாக பொதுமக்கள் நேரடியாக மாநகராட்சியைத் தொடர்புகொண்டு, மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தப் புகார்களைப் பதிவு செய்ய பேரிடர் மேலாண்மைப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
மழையால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய 044 - 25619204, 044 - 25619206, 044 - 25619207, 044 - 25619208 என்ற தொலைபேசி எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நகர்புற உள்ளாட்சி தேர்தல் - உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்...!