முறையாக வரி செலுத்தியதால் ரூ.6 கோடி வரை ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி - Property tax by Chennai corporation
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15ஆம் தேதிக்குள் முறையாக வரி செலுத்தியதால், சுமார் 6 கோடி ரூபாய் வரை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. அவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக, பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. சொத்து வரியினை முறையாகச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாட்ஸ் அப், பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவி உள்ள அறிவிப்புப் பலகைகள் (Vishual Media Display), திரையரங்குகளில் விழிப்புணர்வு படம் ஒளிபரப்புதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்து வரி செலுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்து வருகிறது.
கடந்த ஆண்டிற்கு முந்தைய நிதி ஆண்டைப் (2021 - 2022) பொறுத்தவரையிலும், சொத்து வரி 778.07 கோடி ரூபாயும், தொழில் வரி 462.35 கோடி ரூபாயும் என மொத்தமாக 1,240.42 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் 2023 - 2024ஆம் நிதி ஆண்டிற்கு சொத்து வரி ஆயிரத்து 680 கோடி ரூபாயும், தொழில் வரி 500 கோடி ரூபாயும் வசூலிக்க மாநகராட்சி இலக்கு வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த நிதி ஆண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீதத்தை செலுத்தும் வரியில் இருந்து ஊக்கத் தொகையாக பெற்று பயன் அடையுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன்படி 15ஆம் தேதி வரை 275 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு 15ஆம் தேதிக்குள் முறையாக வரி செலுத்தியதால், சுமார் 6 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்ககிட்ட பைக் இல்லையா..? அப்போ ரெடியா இருங்க.. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!