சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று(ஜன.4) 2 ஆயிரத்து 731 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,489 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அறிகுறி இல்லாத கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு வீட்டிற்கே சென்று முதற்கட்ட பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்கள், செவிலியர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
200 மருத்துவக் குழுக்கள்
சென்னையில் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு குழு வீதம் 200 குழுக்களை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு தன்னார்வலர் என மூன்று நபர்கள் இருப்பார்கள்.
இந்த மருத்துவக் குழு கரோனா நோய்த் தொற்று உள்ளவர்களின் வீட்டிற்கே சென்று பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையைக் கண்காணிப்பார்கள். ஆக்ஸிஜன் அளவு, அறிகுறிகள் ஏதேனும் ஏற்படுகிறதா, மருத்துவமனை சிகிச்சை அவசியமா என்பதை இந்த மருத்துவக்குழு பரிசோதனை செய்து சூழலுக்கு ஏற்ப பரிந்துரைகளை வழங்குவார்கள்.
மேலும், வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு உதவ ஐந்து பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் உள்ள நபர்கள் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கிறார்களா, விதிகளை மீறி வெளியே செல்கின்றனரா என இக்குழு கண்காணிப்பதோடு அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளையும் செய்து கொடுக்க உள்ளனர். மருத்துவக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுக்கள் இன்று (ஜன.5) முதல் சென்னை மாநகராட்சியில் களப்பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு