சென்னை ஐஸ்ஹவுஸ் ரோட்டரி காலனி 3ஆவது தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (72). இவர் திருமணம் செய்து கொள்ளமால் தனியாக வசித்து வந்தார். அரசு முதியோர்களுக்காக கொடுக்கப்படும் ஓய்வூதியத் தொகையான ஆயிரம் ரூபாய், கூலி வேலைக்கு கூப்பிட்டால் செல்வது போன்றவற்றால் தன்னுடைய பொருளாதார தேவைகளை ஆதிலட்சுமி பூர்த்தி செய்து கொண்டு வந்துள்ளார்.
நேற்றிரவு அக்கம் பக்கத்தினருடன் பேசிவிட்டு தூங்க சென்ற ஆதிலட்சுமி, இன்று (மார்ச் 4) காலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் ஆதிலட்சுமியின் வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில், ஆதிலட்சுமி உயிரிழந்து காணப்பட்டுள்ளார். மேலும் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் வெட்டு காயங்களும், ஆடைகள் கலைந்த நிலையுடனும் காணப்பட்டார்.
உடனே இதுகுறித்து ராயப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் மயிலாப்பூர் துணை ஆணையர் செஷாங் சாயி நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மூதாட்டியின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கூவம் வழியாக ஒருவர் வீட்டிற்குள் நுழைவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து அந்தக் கூவத்தில் குதிரை ஓட்டும் நபர்கள் அடிக்கடி மது அருந்திவிட்டு செல்வது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த வசந்த குமார் என்பவர் மீது கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பதுங்கி இருந்த வசந்தகுமாரை 6 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், வசந்தகுமார் விடியற்காலை போதையில் வரும் போது மூதாட்டியின் கதவு திறந்துள்ளதை கண்டு பணத்தை திருட வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
வசந்தகுமாரை கண்ட மூதாட்டி சத்தமிட்டதால் வாயை மூடி அவரை பாலியல் வன்புணர்வு செய்து டம்ளரை மடக்கி மூதாட்டியின் கழுத்தை குத்தி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த 750 ரூபாயை திருடிவிட்டு தப்பி சென்றதாக தெரியவந்தது. இதன் பின் வசந்தகுமார் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியை 6 மணி நேரத்திற்குள் கைது செய்த ராயப்பேட்டை தனிப்படையினரை காவல்துறை உயர் அலுவலர்கள் வெகுவாக பாராட்டினர்.