சென்னை: தமிழக மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்ற போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறி அவருக்கு பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தனர். ஆனால் அமலாக்கத்துறையினர் இஎஸ்ஐ மருத்துவர்களையும் அழைத்து வந்து செந்தில் பாலாஜியை பரிசோதித்தனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவையும் சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்துவரும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்குவதும், ஒன்றிய அரசின் ESI மருத்துவர்களை வரவழைத்ததும், AIIMS மருத்துவக் குழுவை வரவழைப்பதும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களை, அமலாக்கத்துறை அவமானப்படுத்தும் செயலாகும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தற்போது சென்னை அண்னாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ததில் இதயத்திற்கு செல்லக்கூடிய மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதனால், அவருக்கு உடனடியாக பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்து உள்ளனர். ஆனால், அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியதோடு, நேற்று ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை வரவழைத்தது. வேறு பகுதிகளில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவர்களை வரவழைத்து உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.
இது தமிழ்நாடு அரசு மருத்துவர்களை இழிவுபடுத்துகின்ற செயலாகும் எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ நிபுணர்கள் ஆஞ்சியோகிராம் செய்து அதன் அடிப்படையில் பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக தெரிவித்தார். ஆஞ்சியோகிராம் சோதனையில் அடைப்பு இருப்பது கண்டறிபட்டால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மருத்துவர்கள் அதனை ஏற்றுக் கொள்வர் என்றும் எனவே, அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதால், நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வருவேன் என்று அமலாக்கத்துறை அடாவடி செய்வது என்பது தமிழ்நாட்டு மருத்துவர்களை அவமானப்படுத்துகின்ற செயலாகும் என்று குற்றம்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை என்ன சுயேட்சையான அமைப்பா? அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அமைப்பு என்றும், ஒன்றிய அரசு என்ன உத்தரவிடுகிறதோ? அதை செய்யக்கூடிய அமைப்பாக தான் இந்த அமலாக்கத்துறை இருப்பதாக சாடினார்.
இன்னும் சொல்லபோனால், பாஜகவின் கிளை போல இந்த அமலாக்கத்துறை செயல்படுவதாகவும், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை மிரட்டக்கூடிய செயலை அமலாக்கத்துறை செய்து கொண்டிருகப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமலாக்கத்துறையே ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்ற பொழுது, தமிழ்நாட்டு மருத்துவர்களின் மீது அமலாக்கத்துறை நம்பிக்கை இல்லை என்று சொன்னால் எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் மீது எவ்வாறு நம்பிக்கை வரும் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? அமலாக்கத்துறை எவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதோ, அதே போல் தான் எய்ம்ஸ் மருத்துவமனையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவர்களையும் மாநில மருத்துவர், மத்திய மருத்துவர் என பிரித்து அவர்களுக்கிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்குவது என்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றார்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நியாயமான முறையில் தான் இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். மருத்திவ நியதிகளுக்கு உட்பட்டு தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பருந்துரைத்து உள்ளதாக கூறினார். எனவே, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாமல் அமலாக்கத்துறையின் காலதாமதத்தினால் அவருடைய உயிருக்கு எதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அமலாக்கத்துறையும், மோடி அரசுமே பொறுப்பு ஏற்க வேண்டும்” கூறியுள்ளார்.