சென்னை: தமிழ்நாட்டில், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் கற்றல் அறிவுத்திறனை கண்டுபிடிப்பதற்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வருவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.
6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. அதாவது, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டி.ஐ.இ.டி.) வாயிலாக விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.
இந்நிலையில், தற்போது மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறையை, நடப்பு கல்வியாண்டில் இருந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்துகிறது. முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்த, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: Neeraj Chopra : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம்.. 40 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
பள்ளிக்கல்வித்துறையில், படித்து வரும் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வானது, இந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியிலும், 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியிலும் துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 27ம் தேதி, 4 முதல் 12 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு, முதல்பருவத்தேர்வு மற்றும் காலண்டுத்தேர்வு முடிவடைகிறது என கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநில கல்வியியல், “ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்” வினாத்தாளை வடிவமைத்து, காலாண்டு தேர்வுக்கு பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அறிவுத்திறன் வெளிப்படும். இதனைக் கொண்டு மாணவர்களை, மெல்லக் கற்கும் மாணவர்கள், சராசரி மாணவர், நன்றாக படிக்கும் மாணவர் என பிரித்து கற்பித்தலில் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத் தேர்வில், பொது வினாத்தாள் முறையை அமுல்படுத்தினால் பல்வேறுப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. கடந்தாண்டில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட்டு, வினாத்தாள் லீக் ஆகியது சர்ச்சையானது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் இருந்து மாநிலம் முழுவதும் காலாண்டுத் தேர்வினை நடத்துவதற்கான ஒரே மாதிரியான கால அட்டவணை வெளியிடப்படாமல் உள்ளது. மேலும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரிக்கும் வினாத்தாள், மாணவர்களின் கற்றல் அறிவுத் திறனை சோதிப்பதற்காக மட்டுமே என பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: World Athletics Championship: 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5வது இடம்! தேசிய சாதனை படைத்த வீராங்கனை!