சென்னை சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரம் (கேள்வி பதில் நேரம்) நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். இதனிடையே, சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான நடைபெறுகிறது.
இந்தநிலையில், இன்று (மே.9) கேள்வி பதில் நேரத்தில் கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி பேசுகையில், "அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு தனியாக கவுன்சிலிங் நடத்தி அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, " அரசு கல்லூரிகளில் அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பித்து நேரடியாக சேர வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கலந்தாய்வு என்பது சாதாரணமானது கிடையாது. கவுன்சிலிங் என்றால் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்பார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைனில் கலந்தாய்வு என்றால் எவ்வளவு குளறுபடிகள் இருந்தது என்பதை சென்ற ஆண்டு அண்ணா பல்கலையில் நடைபெற்ற கலந்தாய்விலேயே நாம் பார்த்து இருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கூட 10 இடங்களில் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது.
மேலும், கலந்தாய்வு என்பது நிச்சயமாக நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. கலந்தாய்வு வேண்டாம். அந்தந்த கல்லூரிகளில் எங்கு இடம் உள்ளதோ, அங்கு நேரிடையாக விண்ணப்பித்து சேரலாம். விண்ணப்பிக்காத மாணவர்களும் சேர்வதற்கான அவகாசம் கொடுக்கிறோம்" என்றார்.