சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக இருப்பவர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தி பட்டா வழங்கும் வகையில், வருவாய்த்துறை செயலாளர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அரசாணை வழங்கியுள்ளார்.
இது அரசாணையில் கோயில் நிலங்களில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கும் பொருந்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிராக ஒழுங்குமுறை என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பை அரசே ஊக்குவிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை கோயிலுக்கான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் வருவாய்த்துறையின் தன்னிச்சையான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒழுங்குமுறைப் படுத்தி பட்டா வழங்குவது என்பது ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு அரசே துணை புரிவதாக நீதிமன்றம் கருதுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் தொடர்ந்து உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது. இதுவரை ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும், அகற்றவும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒழுங்குமுறைப்படுத்திய பின்னர் மட்டுமே புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது. அரசு தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதுவரை இந்த அரசாணையின் படி எந்த நடவடிக்கையும் தற்காலிகமாக மேற்கொள்ளப்படாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உறுதி அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.