சென்னை: பணிவரன்முறை, சமமான வேலைக்கு சமமான ஊதியம் வேண்டி அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் பொதுப்பணித்துறை அமைச்சரிடம் மனு வழங்கினர்.
அந்த மனுவில் அவர்கள், 'தமிழ்நாட்டில் உள்ள 149 அரசுக் கலைக் கல்லூரிகளில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதிகளுடன் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.
அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மற்ற மாநிலங்களில் ஊதியம் வழங்குவது போல ஊதியம் வழங்கவும், அவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பினீர்கள்.
அதன் பயனாக கடந்த ஆட்சி முடியும் நேரத்தில் 5 வருடம் பணி அனுபவம் கொண்டவர்களை பணிவரன்முறை செய்வதற்காக சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ரூ.15 ஆயிரமாக இருந்த ஊதியத்துடன், 5 ஆயிரம் ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது. ஐந்து வருடம் பணி அனுபவம் கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியும் நிறைவடைந்துள்ளது. தற்போது அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக உயர் கல்வித்துறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால், கவுரவ விரிவுரையாளர்கள் அரசு ஊழியர்களாகும் கனவு கானல் நீராகிப்போனது. எனவே, பணி வரன்முறை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கி பாராட்டு