முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, மெரினா கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் 50.80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதிமுகவின் தற்போதைய ஆட்சிகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் நினைவிடத்தைத் திறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நினைவிடத்திற்கான இறுதிக் கட்ட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்டு வரும் நினைவு மண்டபத்தில், அருங்காட்சியகம், அறிவியல் பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிக்கு 12 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதன்படி செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, அரசிடம், 12.32 கோடி ரூபாய் கேட்கப்பட்டிருந்தது.
அந்த நிதியை தற்போது அரசு ஒதுக்கி உள்ளது. பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில், அறிவு சார் பூங்கா, அருங்காட்சியகம் பராமரிப்பு, சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
தற்போது நினைவு மண்டபத்தின் 2020-2021 முதல் 2025-26 வரை ஐந்தாண்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு கட்டணங்களுக்கான செலவினத் தொகை 7 கோடியே 30 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய், மின் நுகர்வுக் கட்டணம் 2 கோடியே 16 லட்சம் ரூபாாய் என மொத்தம் 21 கோடியே 79 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.