கோவிட் 19 தொற்று நாளுக்கு நாள் மக்களை பயமுறுத்திவருகிறது. கோவிட் 19 தொற்றை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கியமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நடைபெறும் பொதுத்தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் திட்டமிட்டபடி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி தேர்வு மையங்களான பள்ளி வளாகம், பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் துறை மூலம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் தங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் சண்முகநாதன், அரசு அறிவுரையைப் பின்பற்றி பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம்செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், "தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றாலும் கோவிட் 19 தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் அறை கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வளாகம் முழுவதும் சுத்தமாக உள்ளது" என்றனர்.
இதையும் படிங்க: கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்!