சென்னை : சென்னை விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூலை 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சூடோமோனாஸ் கிருமி பாதிப்பினால் குழந்தை கை அகற்றப்பட்டது (Child's Hand Amputation at Rajiv Gandhi Government Child Hospital) என்று கூறினால் சரியாக இருக்கும் என்றார்.
சூடோமோனாஸ் உடல் முழுக்கப் பரவினால் மிகவும் கஷ்டமாகி விடும் என்றும், குழந்தைக்கு சூடோமோனாஸ் கிருமி வரும் அளவிற்கு என்ன நிலை? என்பது தான் தெரியவில்லை என்றார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால் கால் விரல் அழுகிப்போகும் என்றும் அந்த விரலை எடுக்கவில்லையென்றால் கால் முழுக்க அழுகிப்போகும் என்றும் அதைபோல தான், மருத்துவக் குழுவின் அறிக்கை இருப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார். ஆனால், அரசு மருத்துவமனைக்கு எல்லோரும் நம்பிக்கையுடன் வரும் வகையில் சிகிச்சை இருக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று கூறியுள்ளார்.
முக்கியமான நபர்களே அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை என்று குற்றம்சாட்டிய அவர், அனைத்து தலைநகர் மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டது குறித்து அவரது தாய், ‘இது போன்று வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது’ எனக்கூறியதாகவும், சில நேரங்களில் தவறுதலாக கூட வர வாய்ப்பு இருப்பதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், கிருமி தொற்று என்பதால் அது பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றார்.
பொது சிவில் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவான சட்டம் என்றும் பல பிரிவுகளில் பல்வேறு பழக்க வழக்கங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எதாவது ஒரு கால கட்டத்தில் எல்லாவற்றையும் ஒரே நிலையில் கொண்டுவர வேண்டிய அவசியம் இருப்பதாகவும், ஒரு சில அரசியலமைப்பு சட்டத்தில் அப்படி சொல்லப்பட்டுள்ளதாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக சில நடைமுறைகளை சட்டத்தில் சில பிரிவுகள் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றையும் ஒரே நிலையில் கொண்டு வரும்போது எல்லோருடைய வாழ்க்கை தரமும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறிய தமிழிசை, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பழக்க வழக்கங்கள் இல்லாமல் ஒரே நிலையாக வரும் போது எல்லாருக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு தண்ணீர் வர வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியத்தில் வலியுறுத்தி கொண்டு இருப்பதாகவும்' அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அண்ணாமலை திட்டவட்டம்!