சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டமானது கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் இன்று (ஜனவரி 5) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது.
- தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.
- கரோனா தொற்று காரணமாக பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன், அரந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
- ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையின் முக்கிய அம்சங்கள்.
- கரோனா நோயாளிகள் 33,117 நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு குறித்து ஆளுநர் புகழாரம். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதலமைச்சராக நமது முதலமைச்சர் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதலமைச்சர் பெற்றிருப்பது பெருமைக்குரியது என ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
- இரு மொழி கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
- வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- ஜனவரி 12 ஆம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்.
- அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.
- மேகதாது அணை கட்ட கர்நாடகாவை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது.
- ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்.
- இலங்கை சிறையில் உள்ள 68 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- GST வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
- நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து கூறி தனது முதல் சட்டப்பேரவை கூட்டத்தின் 42 நிமிட உரையை நிறைவு செய்தார்.