சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் எண்ணித் துணிக தொடரின் 10வது நிகழ்ச்சியான தமிழ் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்நிகழ்வில், தமிழ் மொழி இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "நான் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு, எனக்கு தமிழ் இலக்கியம் பற்றியும், மொழி பற்றியும் பெரியளவில் ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். தமிழ் மொழி, இலக்கியச் செறிவு மிகுந்தது. திருக்குறள் பற்றி தெரிந்திருந்தாலும், மற்றபடி ஒன்றும் தெரியாது.
திருக்குறளை ஆங்கிலத்தில் நான் படிக்கத் தொடங்கிய பின், அதனுடன் தீவிரக் காதல் வயப்பட்டேன். நான் 5வது படிக்கும்போது என் அப்பா பகவத் கீதையை கொடுத்து படிக்கச் சொன்னார். அப்போதிலிருந்து பகவத்கீதைதான் எனக்கு உற்ற தோழனாக இருந்தது. ஆனால், இப்போது திருக்குறளோடு சேர்த்து இரண்டு புத்தகங்கள் என்னுடைய உற்ற தோழனாக உள்ளன.
திருக்குறளை ஆங்கிலத்தில் படித்தபோது, அதன் விளக்கங்கள் மிக ஆழமானதாக இல்லாததால், சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லையோ என நினைத்தேன். ஆனால், தமிழில் திருக்குறள் எளிதில் புரியக் கூடிய ஒன்றாக இருப்பதை நான் அறிந்தேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் நான் சமஸ்கிருதத்தைப் பார்த்தேன். அப்போது அக உணர்வு, மெய்யுணர்வு ஆகியவற்றை பற்றி திருக்குறள் பேசியிருப்பதை உணர்ந்தேன்.
பதிணென்கீழ்கணக்கு நூல்களை படித்தபோது நான் வியந்தேன். மொழிதான் மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கும்போது, ஆங்கிலம் சமீபத்தில் உருவான நாகரிகம். ஆனால், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான திருக்குறள், புதிதாக உருவான நாகரிகத்துடனும் தொடர்புபடுத்தி பார்க்க முடிகிறது என்றால், அதுதான் நம் தமிழ் மொழியின் சிறப்பு.
ஒரு உயிர் பாதிக்கப்படும்போது நமக்கு ஏற்படும் வலிதான் இந்த உலகத்துடன் நமக்கான தொடர்பை குறிக்கிறது. ஏதோ ஒரு விலங்கு, செடி, கொடிகள் பாதிக்கப்பட்டாலும் நமக்கு வலிக்கிறதென்றால், அதுதானே இந்த உலகத்தின் நியதியாக இருக்கிறது. வள்ளலார் இதனைத்தான் 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார்.
எனவேதான், ஐரோப்பிய மொழிகளால் தமிழ் மொழியின் அளவிற்கு வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும்தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடிய தன்மை பெற்றுள்ளது. காஷ்மீர் முதல் வடகிழக்கு நாடுகள் வரை நான் பணியில் இருந்திருக்கிறேன். எனக்கு கிடைத்த நேரத்தில் நான் நம் நாடு, மொழிக்காக என்ன செய்வதென சிந்தித்தேன்.
முதுமொழிக் காஞ்சியில் உள்ள அனைத்து பாடல்களும், இந்த உலகம் முழுமைக்கும் உள்ள மனிதர்கள் அனைவருக்குமாக எழுதப்பட்டவை. தமிழ் மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பதால் பெருமை இல்லை. தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழ் மொழியின் செறிவை தமிழ் மொழியிலேயே படித்தால்தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும்.
'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என சொல்வதுபோல எதுவுமே சிரமமில்லை என்பதை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தமிழ் பயிலும் மக்கள் நிரூபித்துள்ளனர். தமிழ் மொழி இலக்கியங்களை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறவர்கள், அவர்களுக்காக மட்டும் இதனை செய்யவில்லை. தமிழிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வதன் மூலம் அந்த மொழிக்கும், மக்களுக்கும், மொத்த மனிதத்துக்கும் உதவி செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
மொழி பெயர்ப்பு செய்யும்போது அதன் கருத்துகளை விரிவாக விளக்குங்கள். திருக்குறளை திருவள்ளுவர் பெருங்கடலை வாளியில் அடக்குவதுபோல் செய்துள்ளார். அது அவரால் மட்டுமே சாத்தியம். நாம் அதனை விரிவாகத்தான் விளக்க வேண்டும் என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் புரிந்து மொழி பெயர்க்க வேண்டும்.
நான் ஆளுநரோ இல்லையோ, தமிழ் மொழியை முழுவதுமாக கற்றுக்கொள்வதை என் வாழ்நாள் லட்சியமாக மாற்றிக் கொண்டுள்ளேன். தத்தி நடக்கும் குழந்தைபோல நான் இருக்கிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் தொடங்கிவிட்டேன் என்பதே முக்கியம்" என கூறினார்.
இதையும் படிங்க: "மகளிர் இட ஒதுக்கீடு" பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை - வானதி சீனிவாசன் பெருமிதம்!