மத்தியப் பிரதேசத்தின் ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை21) காலை உயிரிழந்தார்.இவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'மத்திய பிரதேசத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டனின் மறைவு என்னை மிகுந்த அதிர்ச்சியிலும் சோகமான துக்கத்திலும் நிரப்புகிறது. அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, பயனுள்ள நிர்வாகி மற்றும் அற்புதமான மனிதர்.
அவர் இந்திய மக்களின் நலனுக்காக முழு வாழ்க்கையும் அர்ப்பணித்தவர். அவர் அமைச்சரவையில் அமைச்சராகவும், மன்றத் தலைவராகவும், உத்தரப் பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர். லால்ஜி டாண்டன் பிகார் மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றியவர்.
அவரது மறைவு இந்திய மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இதனால் துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவனிடம் அவருடைய ஆத்மா நிம்மதியாக இளைப்பாறவும், இந்த அளவிட முடியாத இழப்பை சமாளிக்க அவரது குடும்பத்திற்கு பலத்தை கொடுக்கும்படியும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை தாக்கியவர்கள் உள்பட மூன்று பேர் சிறையில் அடைப்பு!