தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது; 'இந்தியத் திருநாட்டின் மகிழ்ச்சிகரமான 74ஆவது சுதந்திர நன்னாளில், தமிழ்நாடு மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியம், பிரகாசமான எதிர்காலத்தைப் பெற்றிட இதயம் நிறைந்த வணக்கத்தையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய இந்தியா, பல்வேறு நாடுகளிடையே பரஸ்பர நல்லிணக்கத்தை உருவாக்குவதில் பெருமையுடன் முன்னணியில் அணிவகுத்து நிற்கிறது. நம் தேசமானது சுயசார்புடையது, அதே வேளையில், அதன் அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி, ஆழ்ந்த கலாசார வேர்கள், சமூக ஒத்திசைவுக்காக உலகம் முழுவதிலும் நன்கு மதிக்கப்படுகிறது.
இத்தருணத்தில், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு அரும்பாடுபட்டு, தியாகம் செய்திட்ட வீரம் நிறைந்த நம் நாட்டின் ஆத்மாக்கள் அனைவருக்கும் நமது அஞ்சலியை காணிக்கையாக்கிடுவோமாக.
நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேறச் செய்திட்ட அனைவருக்கும் நமது நன்றியை வெளிப்படுத்திடுவோம். இனிய இந்த சுதந்திர நன்னாளில், உண்மையான அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பபான்மையுடனும் நாட்டின் வளர்ச்சிக்காக நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்திட உறுதி எடுத்துக் கொள்வோமாக.
நம் தேசபக்தி, நம் எண்ணங்களை நிரப்புவதோடு, நம் மக்கள் மீதான கரிசனம், அக்கறை நம் இதயங்களில் ஆதிக்கம் செலுத்திட வாழ்த்துகின்றேன்' இவ்வாறு தெரிவித்திருந்தார்.