டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.31) மாலை உயிரிழந்தார். இதனை அவரது மகன் அபர்ஜித் முகர்ஜி உறுதிபடுத்தினார். பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் " இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைகிறேன். அவர் ஒரு சிறந்த மக்களவை உறுப்பினராகவும், மாநிலத்தில் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார்.
அனைத்து அரசியல் கட்சியில் உள்ளவர்களும் சமூகத்தின் அனைத்து பிரிவில் உள்ளவர்களாலும் மதிக்கப்பட்டார். இந்தியாவின் அரசியல் மற்றும் வரலாறு குறித்து அவருக்கு மிகுந்த அறிவு இருந்தது. தனது பல்வேறு திறன்களையும் நாட்டிற்காக முழுமையான பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் சேவை செய்தார். தேசத்திற்காக அவர் செய்த பங்களிப்புகள் ஒருபோதும் மறக்க முடியாது.
அவரது மறைவு இந்திய மக்களுக்கு பெரும் இழப்பாகும். ஒவ்வொரு புகழ்பெற்ற சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அவரது குடும்பத்தினரு்ககு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வவல்லமையுள்ள கடவுளிடம் அவருடைய ஆத்மா ஓய்வெடுக்கும்படி பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரணாப்புக்கு ஏன் பிரதமர் பதவி வழங்கப்படவில்லை?