சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமெரிக்காவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற "தி ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ சாம்பியன்ஷிப்" பட்டம் வென்ற இந்திய-அமெரிக்க மாணவி ஹரிணி லோகனை சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பாராட்டினார்.
ஆளுநர் தனது பாராட்டு உரையில் பேசும்போது, ஹரிணி லோகனின் கடின உழைப்பையும், அவரது பெற்றோர்களையும் குறிப்பாக அவரது தாயார் ராம் பிரியாவை மாணவிக்கு ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருந்தமைக்காக வாழ்த்தினார். அமெரிக்காவில் 8ஆம் வகுப்பு படிக்கும் ஹரிணியின் குடும்பம் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கு பெற்ற இந்த உச்சரிப்புப் போட்டியில் மொத்தம் 26 கடினமான வார்த்தைகளில் 22 வார்த்தைகளை சரியாக உச்சரித்து விருதை வென்றார். இந்த விழாவில் ஹரிணி, போட்டிக்குத் தயாராகும் விதம், பள்ளியின் அன்றாட கடமைகளைச் செய்ததுடன் இசைப் பயிற்சி போன்ற இணை பாடத்திட்ட செயல்பாடுகளிலும் தான் எவ்வாறு மேற்கொண்டு போட்டியில் வென்ற தனது அனுபவத்தை விழாவில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ஹரிணி, கவனம், கடின உழைப்பு, பின்னடைவுகளில் எவ்வாறு மீண்டு எழுவது போன்றவற்றை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் அவரது வெற்றி மற்றும் அனுபவத்தால் ஈர்க்கப்பட்டனர். ஆளுநர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவும், கடினமாகப் கற்கவும், தோல்விகளைக் கண்டு துவளாமல், வெற்றியை நோக்கிச் செல்வதில் கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டார்.
புதிய இலக்குகளை நிர்ணயித்து படிப்பில் கவனம் செலுத்துமாறும் ஹரிணிக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும் இச்சாதனை வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகளுக்குத் தொடக்கமாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சாதனையாளரின் பெற்றோர் லோகன் ஆஞ்சநேயுலு மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாரதிய வித்யா பவன், சென்னை மற்றும் சென்னை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆளுநரின் முதன்மைச் செயலாளர், அலுவலர்கள், ஆளுநர் மாளிகை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நிறைவடைந்தது உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?