சென்னை: மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான உயர் மட்ட குழுவின் உறுப்பினரும், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஜவகர்நேசன் நேற்று (p) செய்தியாளர்களை சந்தித்தபோது அவர், பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதும் துணை வேந்தருக்கே உள்ளது. ஆட்சி மன்ற குழு கூட்டம் நடத்துவது கல்வியியல் குழு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் அனைத்தும் துணைவேந்தராளயே மேற்கொள்ளப்படும்.
வேந்தர் மற்றும் இணை வேந்தர் ஆகிய பதவிகள் கௌரவ பதவியாகவே பார்க்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் பொழுது வேந்தர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இணைவேந்தர் மற்றும் துணைவேந்தர் முன்னிலையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவது மரபாக இருந்து வருகிறது என்றார்.
மேலும் பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்கள் கல்வியல் துறையில் அல்லது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். துணைவேந்தர் வரவேற்புரை மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்த பின்னர் சிறப்பு விருந்தினர் வாழ்த்துரை வழங்குவார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமளிப்பு சான்றிதழில் துணைவேந்தர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கையொப்பம் மட்டுமே இடம் பெற்று இருக்கும். சமீப காலமாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மரபுகளை மீறி ஆளுநர் சிறப்புரை ஆற்றி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் ஆளுநர் சிறப்புரை ஆற்றக்கூடாது என எந்த சட்ட விதியிலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன் கூறினார்.
இதையும் படிங்க: திராவிடர் குறித்த தமிழ்நாடு ஆளுநரின் கருத்திற்கு டி.ஆர்.பாலு எம்பி பதில்!