தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள கொடிநாள் வாழ்த்துச் செய்தியில், "போரின்போதும், அமைதியை நிலைநாட்டுவதிலும் படை வீரர்கள் புரிந்த தியாகங்களை நன்றியுடன் நினைவுகூருவதற்கான நல்லதொரு வாய்ப்பாக ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் நாள் கொடிநாளாக கொண்டாடப்பட்டுவருகின்றது.
நம் நாட்டிற்கெதிராக வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டை, பேணிக்காப்பதுடன், தேவைப்படும்போதெல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதிலும், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதிலும் உற்ற துணையாகத் திகழ்ந்துவருகின்றனர்.
கொடிநாளுக்கான நமது பங்களிப்புகள் துணிச்சல்மிகு வீரர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவிற்கான சான்றாக அமைகிறது. இந்த நேரத்தில் படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முப்படை வீரர்களின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க தமிழ்நாடு மக்கள் முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், “கொடிநாள் நிதி வழங்க மக்கள் முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.