சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டுநாள் அரசு விடுமுறைக்கு பின்பு (ஆக.31) தொடங்கியது.
அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்து நடந்த உரை:
பிரின்ஸ், குளச்சல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்: எங்களுடையத் தொகுதி விவசாய நிலங்கள், வனப்பகுதிகள், 9 அணைக்கட்டுகள் நிறைந்த பகுதி.
இங்குள்ள கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டும், பாறைகள் உடைக்கப்பட்டும் எம். சாண்ட் மணலாக மாற்றப்பட்டு, 500 டாரஸ் லாரிகளில், 50 முதல் 70 டன்களாக ஏற்றப்பட்டு அண்டைமாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கேரளாவில் கனிமவளங்கள் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டு கனிமவளங்கள் கடத்தப்பட்டுக் கொண்டு, அங்கு செல்லப்படுகின்றன. தொடர்ந்து இப்படி நடந்தால், இயற்கை அழிந்து மழைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். இதனைத் தடுக்க நடவடிக்கை வேண்டும்.
துரைமுருகன், நீர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர்: கன்னியாகுமரி மட்டும் இல்லை. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை கவனத்தில் எடுத்துக் கொண்டால், கனிமவளங்கள் வேறு மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதைத் தடுக்க முடியாது.
அதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள 15 குவாரிகளில், 12 குவாரிகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மட்டுமில்லாமல், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆகவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல அரசு நடவடிக்கை எடுக்கும்.
பிரின்ஸ், குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர்: மலையை உடைப்பது சுலபம், உருவாக்குவது கடினம். அது போலத் தான் ஆறுகள். ஆகவே, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய பாறைகளை உடைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தலாம். அதையும் தமிழ்நாட்டிற்குள் பயன்படுத்தலாம், கேரளாவிற்கு கொண்டு செல்லக்கூடாது.
துரைமுருகன், நீர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர்: பாறைகளை வெட்டி எடுப்பதை தடுக்கமுடியாது. அதனால் தான் அங்கு செயல்பட்டு வரும் 12 குவாரிகளை அரசு மூடியுள்ளது. உறுப்பினரின் கோரிக்கையை பரிசீலனை செய்து கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிவி சண்முகம் கைது!