சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வருபவர் கார்க்கி. இவர் கலைவாணர் அரங்கத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த கார்க்கி வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 12 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர், நடந்த சம்பவம் குறித்து கார்க்கி ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.