இந்தியாவில் பெரிய அளவிலான அரசின் திட்டங்களைத் செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இதனைக் கைவிட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது.
முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளைத் தளர்த்த திட்டமிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதற்கான வரைவு அறிவிக்கையை மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நோக்கத்துடன் கடந்த மார்ச்12ஆம் தேதி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மே மாதம்10ஆம் தேதிவரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளைத் தளர்த்த எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதில் திருத்தங்களைச் செய்வதும், ஒட்டுமொத்த நாடும் கரோனா அச்சத்தில் உறைந்திருக்கும் வேளையில் அது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதும் நியாயமானவை அல்ல. இந்தச் சிந்தனைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும்.
தொழில் திட்டங்களோ, வேறு திட்டங்களோ ஓர் இடத்தில் செயல்படுத்தப்படும் பட்சத்தில் அதனால் அங்கு வாழும் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அது அவர்களின் வாழும் உரிமையைப் பறிக்கும் செயலாக அமையும்.
அதனால்தான் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக அது குறித்து அங்கு வாழும் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் நியாயமான எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டத்தையே கைவிட வேண்டும் என்பதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படை ஆகும்.
அதற்கு மாறாக, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தத் தேவையில்லை என்பது பொதுமக்கள் மீது சுற்றுச்சூழல் சீரழிவை திணிக்கும் செயல் ஆகும். இது ஐ.நா. விதிகள், மனித உரிமைகளை மீறும் செயல் ஆகும்.
இதையும் படிங்க : கரோனா சூழல்: மக்கள் பணியில் மக்கள் நீதி மையம் தொண்டர்கள்!