சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் பொறியியல் படிக்க ஆர்வமுள்ள 13 பெண்கள், 8 ஆண்கள் என 21 மாணவர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாட்டில் சென்னை ஐஐடி கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சியை ஆன்லைன் மூலம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தை சுற்றி பார்ப்பதற்கும், போட்டித் தேர்வு குறித்து நேரடியாக பார்த்து கற்றுக் கொள்வதற்கும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்துள்ளார். அதனடிப்படையில் 21 அரசு பள்ளி மாணவ, மாணவிகளையும் ஆசிரியர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை அழைத்து வந்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிரியர் பிரபு ரஞ்சித் எடியன், “கிராமப்புறங்களில் அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் சென்னை ஐஐடி கல்லூரிகளில் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத முன்வருவதில்லை காரணம் அவர்களுக்கு சரியான பயிற்சிகளும், வாய்ப்புகளும் அமைவதில்லை.
இதனால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாட்டில் கிராமப்புறங்களில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் சென்னை ஐஐடி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வமுள்ள 21 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறார்.
மேலும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக முதல் முறையாக அவர்களை விமானத்தில் சென்னை அழைத்து வந்துள்ளோம். தற்போது இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளோம் சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்திற்கு சென்று ஆய்வகங்கள், கல்வி கற்கும் சூழல்,அண்ணா நூற்றாண்டு நூலகம்,பிர்லா கோளரங்கம்,அறிவியல் மையங்கள் ஆகியவற்றை பார்வையிட உள்ளோம். இதன் மூலம் மாணவர்களுக்கு தைரியமாக நுழைவுத் தேர்வுகளை சந்திப்பதற்கான சூழல் ஏற்படும்” என தெரிவித்தார்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உதவியுடன் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக எடுத்து வருகிறோம். முதல் முறையாக விமானத்தில் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிராமப்புறங்களில் படித்து வரும் மாணவர்களும் ஐஐடி கல்லூரி மாணவனாக இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: முதுகலை ஆசிரியர்கள் பணி இடமாறுதல்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு!