தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரையில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது.
மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேரக்கூடிய அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணங்களை அரசே செலுத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும், பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் 7.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான சட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணங்கள், விடுதிக் கட்டணங்கள், கலந்தாய்வு கட்டணங்கள் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்று கடந்த 20ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால், முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு 17 நாள்கள் கடந்த நிலையிலும் அரசாணை வெளியிடாமல் இருப்பதால், பெற்றோரும் மாணவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். வழக்கமாக முதலமைச்சர் முக்கியமான அறிவிப்பு வெளியிட்டால் அடுத்த சில நாள்களில் அரசாணை வெளியிடப்படும் நிலையில் , இதற்கு மட்டும் 17 நாள்கள் கடந்த நிலையிலும், அரசாணை வெளியாகாமல் இருக்கிறது.
இதனிடையே சிறப்பு ஒதுக்கீட்டில் 11 ஆயிரம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் ஆறாயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள மொத்த இடங்களான 1104இல், 1035 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இன்னும் 69 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 10,167 இடங்களில், 4,938 இடங்கள் நிரம்பியுள்ளன. ஒட்டுமொத்தமாக, 5,973 மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் கல்விக் கட்டணங்களும், விடுதிக் கட்டணமாக பல லட்சம் ரூபாயும் என, மொத்தம் பல கோடி ரூபாய், தனியார் கல்லூரிகளுக்கு அரசு வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதி கணிசமாக அதிகரிக்கும். இந்தச் சூழலில் தனியார் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் கட்டணம் செலுத்தச் சொல்லி கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ”தமிழ்நாடு அரசு நிதி வழங்கும்; பொறுமையாக இருங்கள்” என கடந்த 4ஆம் தேதி தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் கேட்டுக்கொண்டது.
ஆனாலும் தனியார் கல்லூரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இதன் காரணமாக அக்டோபர் 6ஆம் தேதி மீண்டும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா வெளியிட்ட அறிக்கையில், அரசு, கட்டணங்களை கொடுக்கும் என்றும், விரைவில் அரசாணை வெளியாகும் எனவும், மாணவர்களை கட்டணம் கட்டச் சொல்லி வலியுறுத்தினால் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
”அரசாணையை விரைந்து வெளியிட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினை தீரும், இல்லையெனில் ஏழை எளிய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்” என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதேநேரத்தில் 17 நாள்கள் ஆன பிறகும் முதலமைச்சர் அறிவிப்புக்கே அரசாணை வெளியாகாமல் இருப்பது, பெற்றோர்களையும் மாணவர்களையும் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை!