சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 14ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆனால், தனியார் பள்ளிகள் கடந்தாண்டு கட்ட வேண்டிய கல்விக்கட்டணத்திற்கான பாக்கியை செலுத்தினால் மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்குவோம் என தெரிவித்துவருகின்றன. இதனால், தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கூறும்போது, "அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும், பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதில் இருந்து மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக பதிவிறக்கம் செய்து தர வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டம் கூறுவது என்ன?
அனைவருக்கும் கல்விச் சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும். மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
தனியார் பள்ளியில் இருந்து வரும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டு, அவர்களின் மாற்றுச்சான்றிதழை அனுப்ப அந்தப் பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே, அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை" என்றார்.
இதையும் படிங்க: மாற்றுச் சான்றிதழ் அவசியம் என்று தனியார் பள்ளிகள் சங்கத்தினர் வாதம்!