சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "2022-23ஆம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 1,003 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், முதல் தவணையாக 501 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், பஞ்சாயத்து ராஜ் இயக்குநர், ஊரக வளர்ச்சி தலைமைப் பொறியாளர் அடங்கிய குழுவானது, மாவட்ட ஆட்சியர்களால் அனுப்பப்பட்ட முன்மொழிவுகளை ஆய்வு செய்து, செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கும். கிராமப்புறங்களில் வளர்ச்சி மற்றும் முன்னுரிமைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிதியில், குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்ள அனுமதி இல்லை.
தனியார், கூட்டுறவு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் கட்டுதல், எந்தவொரு மத நம்பிக்கைக்கும், அது சார்ந்த குழுவுக்கும் சொந்தமான நிலம் மற்றும் மத வழிபாட்டு இடங்களுக்கான தேவைகளை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. அதேபோல் நினைவுச் சின்னங்கள், சிலைகள், வளைவு வாயில்கள், வரவேற்பு வாயில்கள் போன்றவற்றை கட்டுவதற்கு அனுமதி இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.