சென்னை: தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் "முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்" தொடர்பான இரண்டாவது ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், போக்குவரத்து, கைத்தறி உள்ளிட்ட 14 துறைகளின், 68 திட்டங்களின் தற்போதைய நடைமுறைகள் குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து, துறைச் செயலாளர்கள் விளக்கினர்.
தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தத் திட்டங்கள் குறித்து, முதலமைச்சர் நிலையில் ஏன் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இவை அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திடும் திட்டங்களாகும். இவற்றில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, முக்கியத் துறைகளை சார்ந்த செயலாளர்கள் அரசின் பெருந்திட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஒரு திட்டத்தின் செயலாக்கத்திற்கு, மற்றொரு துறை தேவையான அனைத்து அனுமதியையும் வழங்கி, முன்னேறிச் செல்ல பாதை வகுக்க வேண்டும்.
அரசுத்துறை அதிகாரிகள் செயல் வீரர்களாக செயல்பட வேண்டும். சாதாரண நன்மை அளிக்கும் திட்டங்களைக்கூட முழுமையாக, குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தும் போது அது முழு நன்மையை ஏற்படுத்தி விடும். திட்டங்களை வகுக்கவும், நிறைவேற்றவும் வழிமுறைகளைச் சொல்லவும் வல்லுநர் குழுவை அமைத்திருக்கிறோம். அவர்களது ஆலோசனைகளை முழுமையாகப் பெறுங்கள். திட்டத்திற்கென அளிக்கப்பட்ட நிதியை பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப முழுமையாகச் செலவிட்டு, பணியை துரிதப்படுத்துங்கள்" எனக் கூறினார்.