சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால், அந்தக் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாகவும் அரசு இந்த விஷயத்தை மூடி மறைக்க செயல்படுவதாகவும் குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்தவர்கள் தஸ்தகீர் - அஜிஸா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் முகமது மகிர் எனும் மகன் உள்ளார். குழந்தைக்கு தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக குழந்தையை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையின் கை கருப்பாக மாறியதோடு, செயலிழந்து அழுகியுள்ளது. இதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வலது கையை அகற்ற வேண்டும் என கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் வலது கையை மூட்டு பகுதிக்கு மேல் வரை அகற்றியுள்ளனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அலட்சியமான சிகிச்சையே குழந்தையின் கை பறிபோவதற்க்கு காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டினர்.
அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால், குழந்தையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்த்து நலம் விசாரித்து, பல்வேறுக் கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின் குழந்தையின் தாய் அஜிஸா செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசு இந்த விவகாரத்தில் மூடி மறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது. குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டது என அமைச்சர் கூறி இருப்பது சுத்தமான பொய்.
குழந்தையின் கை நிறம் மாறியதும் அங்கிருந்து மருத்துவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி சிகிச்சையை தாமதித்தனர். பின்னர் ஒரு மருந்தை பரிந்துரைத்தனர். அந்த மருந்தை நாங்கள் வெளியில் வாங்கி குழந்தைக்கு பயன்படுத்தினோம். குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் ஏன் மருந்தை பரிந்துரைக்க வேண்டும்.” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும்,“அமைச்சர் என் குழந்தையை பார்க்க வரும்போது என்னிடம் ‘நீ மூன்றாவது மனிதர் யாரோ சொல்லிக் கொடுத்து பேசுவது போல உள்ளது’ என கூறியது அதிர்ச்சி அளித்தது”, என கூறினார். “எனது குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருந்தாலும், நான் சிகிச்சைக்கு அழைத்து வரும் போது மருத்துவர்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து தான் என்னிடம் கேட்பார்கள். குழந்தை தானாக கையில் பால் பாட்டிலை வாங்கி அருந்தும். நாம் கூறுவதை புரிந்துக் கொள்வான்”, என கூறினார்.
“அரசு மருத்துவர்கள் என்னிடம் கையெழுத்து வாங்கிய பேப்பரை காண்பித்து, நாங்கள் ஏற்கனவே பிரச்சனை வரும் என தெரிவித்தோம் என்று கூறுகின்றனர். அந்த சூழலில் நாங்கள் எப்படி அந்தப் பேப்பரில் என்ன இருக்கிறது என்பதையார் பார்க்க முடியும். அது எப்படி எங்களுக்கு தெரியும். நாங்கள் என்ன மருத்துவமா படித்து இருக்கிறோம். எனது குழந்தையின் கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு தான் உரிய பதில் சொல்ல வேண்டும்”, என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக குறித்து அவதூறு; வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர் பரபரப்பு புகார்!