சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயின்று 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், விபரங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து வழங்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2020-21 கல்வி ஆண்டிற்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
எனவே, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், 11ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்தொகுப்பு ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரி பார்த்து திருத்தங்கள் செய்ய வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் அவர்களின் பிறப்பு சான்றிதழில் உள்ளவாறு இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 2021 மார்ச் 1ஆம் தேதி 14 வயது நிறைவு செய்து இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை எனக் கூறினால் அவர்களின் பெயரை தமிழ், ஆங்கிலத்தில் எழுதி வாங்கிய பிறகு அதிலுள்ள பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். எனவே, பதிவேற்றம் செய்யப்படும் செல்போன் எண் சரியானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் படத்தொகுப்புகள் புதிய பாடத்திட்டத்தின்படி சரியாக குறிப்பிடப்பட வேண்டும். மாணவர்களின் விபரங்களை சரிபார்த்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்களை பள்ளிக்கு வரவழைத்து கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.