சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்களின் மனிதாபிமானமற்ற செயல் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாகவே நீலகிரியில் டெங்குவால் உயிரிழந்த மருத்துவர் ஜெயமோகனின் உடலை அடக்கம் செய்வதில் அவருடைய சொந்த கிராம மக்கள் பிரச்னை செய்தனர்.
இந்த இரு சம்பவங்களும் கரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றும் தங்களுக்கு இப்படியொரு நிலையா என்று வேதனை தெரிவிக்கின்றனர். தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மருத்துவர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவர்கள் சைமன், ஜெயமோகன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு, துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் அவர்களுடைய இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இதனைச் செய்வதாகக் கூறுகின்றனர்.