சென்னை, திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல், ஜூன் 3 ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், ஜூன் 29 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளோம் என அறிவித்துள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட அரசாணை 354ன் படி அதனை வழங்க வேண்டும் என கடந்த ஆட்சியில் தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது போராட்ட களத்திற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் ஊதிய பிரச்சனை சரிச் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தங்களின் கோரிக்கையை நிறைவேற்றப்பட வேண்டும் என தொடர்ந்து அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வுக்கு புதிய அரசாணை வெளியிடுவதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறும்போது, முதல்வர் பதவியேற்ற போது, அரசு மருத்துவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என நாம் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். இருப்பினும் புதிய ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு பிறகும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வலி ஒவ்வொரு மருத்துவரிடத்தில் அதிகமாகவே இருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்டு, 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரசாணை 354க்கு உயிர் கொடுக்கும் வகையில், அதை செயல்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்துள்ளார். மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்ததோடு, முந்தைய அரசை கண்டித்தார். இருப்பினும் இன்னமும் நம்முடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது.
ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற போராடி வரும் மருத்துவர்களுக்கு, உரிய ஊதியம் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பது முதல்வருக்கு தெரியும். எனவே வருகின்ற ஜூன் 3 ம் தேதி கருணாநிதி பிறந்த நாளையொட்டி, பிறந்த நாள் பரிசாக, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை முதல்வர் வழங்குவார் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மே 18 சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை, ஜூன் 29 ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என கூறினார்.
இதையும் படிங்க: மக்களின் ஆதரவு பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம் - கருத்துக்கணிப்பில் தகவல்