சென்னை : சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (மார்ச் 5) வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்ததால் அவரை உள்ளே அழைத்து வந்து காலணியை கழற்றி சோதனையிட்டனா்.
அவரது காலணியில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனாலும் சந்தேகம் தீராத அலுவலர்கள் அவருடைய இரண்டு கால்களையும் தூக்கிப் பார்த்தனா். அப்போது இரண்டு காலணிகளின் அடிப்பாதங்களில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரித்து பாா்த்தபோது, தங்கப்பசை அடங்கிய சிறிய பாா்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.
இருகால்களின் அடியிலும் 240 கிராம் தங்கப்பசை இருந்ததைக் கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ. 12 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுங்க அலுவலர்கள் ரூ. 12 லட்சம் மதிப்புடைய தங்கப்பசையை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.