சென்னை: சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் அடுத்த செம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர், சத்தியமூர்த்தி (50). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் கார் உதரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பெரம்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாட கடந்த 11ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்த நிலையில், வீட்டின் முன் பக்கம் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. பின், சத்தியமூர்த்தி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 55 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின், உடனடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், தகவலின் அடிப்படையில் கைரேகை நிபுணர்களுடன் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், “வீட்டிற்கு வெளி ஆட்கள் யார் வந்தாலும் அவர்களை உள்ளே வர விடாமல் வீட்டை பாதுகாத்து வந்த இரண்டு நாய்களும் எப்போதும் குறைத்துக் கொண்டே இருக்கும் நிலையில், கொள்ளைச் சம்பவம் நடந்ததில் இருந்து அமைதியாகவே இருந்து வருகிறது” என வேதனை தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து சேலையூர் குற்றப்பிரிவு போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை.. மனைவி, கள்ளகாதலன் உட்பட 4 பேர் கைது!