சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சவூதி அரேபியாவில் இருந்து கொழும்பு வழியாக விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பயணித்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த முகமது ஷா ஆலம்(29) என்பவரை சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது டிஜிட்டல் ரேடியோ மற்றும் 2 எல்.இ.டி. கண்ணாடி விளக்குகள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது 8 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இந்நிலையில், ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 815 கிராம் தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக முகமது ஷா ஆலமை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரகாண்ட்டில் கண்ணாடியை ஒட்ட வைக்கும் தொழில் செய்து வந்தேன். ரியாத்தில் எனது நண்பர் உள்ளார். அவரை சந்தித்து வேலை தேடி சென்றேன். ஆனால் உரிய வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பி வந்தேன். ரியாத் விமான நிலையத்தில் எனது நண்பர் கிராமத்தில் உள்ள சகோதரரிடம் தர சொல்லி 2 விளக்குகள், ரேடியோ தந்தார். ஆனால் அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.