சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பிலிருந்த சுங்கத்துறை அலுவலர்கள், கொழும்புவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மைதீன்(51), சென்னையைச் சேர்ந்த நஜிமா பேகம்(37) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 770 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாகுல் அமீது(31), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (51), தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் பயணித்த சிவகங்கையைச் சேர்ந்த முகமது கரீம்(58) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்திருப்பது தெரியவந்தது. இவர்களிமிருந்து ரூ. 51 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 234 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
மேலும் மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ரிஸ்வான் கான்(27), சாதிக்குல்லமீன்(42) ஆகியோரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிமிருந்து ரூ. 31 லட்சம் மதிப்புள்ள 748 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 7 பேரிடமிருந்து ரூ. 1 கோடியே 13 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 752 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தற்போது, இவர்களிடம் யாருக்காக கடத்தி வந்தனர் என அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அசாமில் 644 பயங்கரவாதிகள் சரண்!