சென்னை : இலங்கையில் இருந்து ஏர் இந்தியா விமானம் 142 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளைக் கண்காணித்து, சந்தேகப்பட்டவா்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த விமானத்தில் வந்திருந்தார். அவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக, அவசர அவசரமாக வெளியே சென்று கொண்டிருந்தார்.
அப்போது இளம் பெண்ணின் மீது சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டனர். ஆனால் உடைமைகளில் எதுவும் இல்லை.
ஆனாலும் சந்தேகம் தீராமல் பெண் சுங்கத்துறை அலுவலர்கள் அவரை முழுமையாக சோதித்தபோது, அவர் அணிந்திருந்த காலணிகள் வித்தியாசமாக இருந்தது. அதை ஆய்வு செய்ததில் அதில் சிறு சிறு 14 தங்க கட்டிகளை ஒட்டி வைத்து இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்த 14 தங்க கட்டிகளின் மொத்த எடை 393 கிராம். அதன் மதிப்பு ரூ.18.84 லட்சம். இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள், அந்த தங்க கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அத்தோடு இளம்பெண்ணை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : பென்சன்தாரர்களின் வங்கிக் கணக்கை வைத்து ரூ.47.7 லட்சம் மோசடி செய்த ஆசாமிகள் கைது