சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த அமீது இப்ராகிம்(21), கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அன்சாரி(27), அகமது பஷீர் (34), சென்னையை சேர்ந்த மஸ்தான் கனி(39) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரித்தனர்.
அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு பேரிடம் இருந்து ரூ. 59 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 417 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த சேகர் குண்டாலா(59) என்பவரின் பெல்ட்டை சோதனை செய்தபோது, அதில் தங்கத்தை வெள்ளி முலாம் பூசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சாகிப் (29) என்பவரை சோதனை செய்துபோது, அவரிடம் இருந்து ரூ. 11 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 267 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
மேலும் விமான நிலைய வருகை பகுதியில் கேட்பரற்று கிடந்த பூந்தொட்டியை சோதனை செய்தபோது ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 117 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நாளில் 6 பேரிடம் இருந்து ரூ. 86 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 41 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அயன்' பட பாணியில் தங்கம் கடத்தல் , ஒருவர் கைது