சென்னை விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் அலுவலர்கள் மலேசியாவிலிருந்து இலங்கை வழியாக சென்னைக்கு வந்த விமான பயணிகள் மலேசியவைச் சேர்ந்த சுசிலா அருணாசலம்(42), ராஜேஸ்வரி பூங்காவனம்(47), சென்னையைச் சேர்ந்த இம்பர்கான்(25) ஆகியோரிடமிருந்துரூ. 23 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 696 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதேபோல், சார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது ஜாவித் உசேன் (26) என்பவரிடமிருந்து ரூ. 28 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 840 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். மேலும், சென்னையிலிருந்து தாய்லாந்து செல்லும் விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த நிறைகுழந்தன்(41), நித்தியானந்தன்(32), நிஷாந்தகுமார்(28), முருகானந்தம் (27) ஆகியோரிடமிருந்து ரூ. 46 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கைப்பற்றினர்.
மொத்தம் ரூ.51 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 536 கிராம் தங்கமும் ரூ.46 லட்சத்தி 17 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!