சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் ரிஸ்வி (55), இப்ராகிம் (56), கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனிபா (35) ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். சோதனையில், தங்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 864 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று கொழும்புவிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த பாத்திமா சனாஷா (52) என்பவரிடமிருந்து 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 523 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் (22) என்பவரின் உடமைகளைச் சோதனை செய்தபோது ஏர் கம்போசர் கருவியில் 12 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 299 கிராம் தங்கத்தைப் பதுக்கி வைத்திருந்தார்.
பக்ரைனிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த கங்கோத்ரி சூரப்பள்ளி (32) என்பவரிடமிருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 299 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சுங்கத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் ஆறு பேரிடமிருந்து 85 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 985 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவி காணவில்லை என்று புகார் அளிக்க வந்தவர் மீது கைது நடவடிக்கை