அழகாய் ஜொலிக்கும் தங்கத்தின் விலையைக் கேட்டாலே நடுத்தர மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று மூவாயிரத்து 832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 30 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையைவிட 136 ரூபாய் அதிகமாகும்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 768 ரூபாய் அதிகரித்துள்ளது. 29 டிசம்பர் அன்று ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்து 536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 9 நாட்களில் அதன் விலை ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வசேத சந்தையில் ஏற்படும் மாற்றங்களாலேயே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பேசிய இந்திய நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் சாந்தக்குமார், "தற்போது திடீர் விலை ஏற்றத்தால் ஒரு சவரன் 30 ஆயிரத்து 656 ரூபாய் என வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் வலுப்பெற்றதாலும் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
மேலும், இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்கத்தின் விலை உயர்ந்தாலும் திருமணத்துக்கும், விழாக்களில் முறை செய்வதற்கும் தங்கம் வாங்குவது தவிர்க்க முடியாததாக உள்ளதாகவும், விலை அதிகமாக இருந்தால் வாங்கும் அளவை சற்று குறைப்போம் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்