சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அத்தொகுதிக்கு உள்பட்ட 165 பயனாளிகளுக்கு ஐந்து பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நகைகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தனர்.
சென்னை மாவட்டத்தில் செயல்படும் 16 கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உள்பட்டு, பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு 13 ஆயிரத்து 595 பயனாளிகள் தகுதி பெற்று, அவர்கள் நகைகளுக்கு ஈடாகப் பெற்ற கடன் தொகை ரூ.66.75 கோடி (அசல் மற்றும் வட்டியுடன்) தள்ளுபடி செய்து தள்ளுபடி சான்றிதழ் மற்றும் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, " தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அது தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் 14 லட்சத்து 40 ஆயிரம் நபர்களின் பொது நகைகடன் தள்ளுபடி செய்யப்படும். நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ளவர்கள் இருந்தால் விண்ணபிக்கலாம். அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். சட்டத்திற்குள்பட்டு நகைக்கடன் வழங்கப்பட்டாதா என சோதனை செய்யப்பட்டு அதைக் கணக்கீடு செய்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறி முறைகேடாக போலியான ஆவணம் மற்றும் நகைகள் கொண்டு நகைக்கடன் பெற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் கூறுகையில், "கரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலையில், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் 2022- மீன்வள மேம்பாட்டு திட்டங்கள்!