சென்னை: வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திவருவதாகச் சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறையினர் கடந்த இரண்டு நாள்களாக சென்னை பன்னாட்டு விமானங்களில் வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்துவந்தனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்கள், சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானம் என மொத்தம் நான்கு விமானங்களில் வந்த பயணிகளைச் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னையைச் சோ்ந்த இரண்டு பெண் பயணிகள், ராமநாதபுரம் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு ஆண் பயணிகள் என ஆறு பேர் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை நிறுத்தி சுங்கத் துறை அலுவலர்கள், தனியான இடத்திற்கு கொண்டுசென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவா்களுடைய உள்ளாடைகளில் மறைத்துவைத்திருந்த தங்க செயின்கள், தங்கக்கட்டிகளைக் கைப்பற்றினர். ஆறு பேரிடமிருந்து 2.67 கிலோ தங்கத்தைக் கைப்பற்றினர். மேலும் அவா்களின் சூட்கேஸ்களில் மறைத்துவைத்திருந்த 14 ஐபோன்கள், எட்டு மடிக்கணினிகளையும் பறிமுதல்செய்தனர். தங்கம், ஐபோன், மடிக்கணினிகளின் பன்னாட்டு மதிப்பு ரூ.1.40 கோடி.
இதையடுத்து ஆறு பேரையும் சுங்கத் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல் அக்டோபர் 17ஆம் தேதி துபாய், சாா்ஜாவிலிருந்து வந்த விமான பயணிகளிடமிருந்து சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில், சென்னை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த இரண்டு ஆண் பயணிகள் அவர்களது உள்ளாடைகளில் மறைத்துவைத்து 466 கிராம் தங்கக்கட்டி, 45 கிராம் தங்க செயின் மொத்தம் 511 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர். அதன் பன்னாட்டு மதிப்பு ரூ.23.53 லட்சம். இதையடுத்து இரண்டு பயணிகளையும் சுங்கத் துறையினர் கைதுசெய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.