மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாள்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சென்னையை தவிர இதர 37 மாவட்டங்களில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிதும் உதவுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
இத்திட்டத்தில், லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் ஊரடங்கு காலங்களில் அரசு மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் பணியாளர்கள் வேலை பார்க்கலாம் என்று அறிவித்திருந்தது.
வேதனை தெரிவிக்கும் கணினி உதவியாளர்கள்
எனினும் இத்திட்டத்தில் பணியாற்றும் கீழ்மட்டப் பணியாளர்கள், குறிப்பாக கணினி உதவியாளர்கள் தங்களை கடந்த அரசு, பணி நிரந்தரம் செய்வதாக 2017ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்து அரசாணை ஒன்றைப் பிறப்பித்த. ஆனால் இன்னும் அதனை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு சுமார் 900க்கும் மேற்பட்ட கணினி உதவியாளர்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தபோது ”2006 முதல் 2010ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டதின் கீழ் (கலைஞர் வீடு வாழும் திட்டம் உள்பட) அவுட்சோர்ஸிங் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் கணினி உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1,200 பேர் தற்காலிகப் பணியில் இருந்து வருகிறோம்.
தொடர்ந்து கணினி உதவியாளர்களின் வேலைப்பளுவை குறைக்கவும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 906 கணினி உதவியாளர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி அவர்களை இளநிலை உதவியாளர்களாக ஈர்த்துக்கொள்ளும் வகையில் கோப்பு தயார் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு தேர்வாணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது.
கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பணி நிரந்தர ஆணை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பொறுப்பேற்ற மற்றொரு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை (எண் 37) 2017ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் சிறப்புத் தேர்வு வைக்க ஒப்புதல் தந்த தேர்வாணையமே தேர்வு வைக்க மறுத்து விட்டது. மாற்று வழி இருந்தும் அரசாணை போட்ட அரசே செயல்படுத்த முன்வரவில்லை" என வேதனை தெரிவிக்கிறார் பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர்.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அனைத்து கணினி உதவியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் து. அருள் நம்மிடம் கூறுகையில், "நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்திலேயே பணிபுரிந்து வருகிறோம். மேலும் எங்களுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்று அலுவலர்களாக பணிபுரிந்துவருகின்றனர். ஆனால் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நாங்கள் இதே வேலையை செய்துவருகிறோம்" எனத் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணினி உதவியாளரான தங்க ரெத்தினம் இது குறித்து நம்மிடம் கூறுகையில், "தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை புரியும் லட்சக்கணக்கான மக்களுக்கு கணினி உதவியாளர்கள் மூலம் கணக்கிடுதல் மற்றும் ஊதியத்தை வங்கியில் செலுத்துதல் உள்ளிட்ட முக்கியமான பணிகளை நாங்கள்தான் செய்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டாவது அரசு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த ஊரக வளர்ச்சிப் பணியாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வட்டாரங்களில் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை கண்காணிக்கும் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஊரக வளர்ச்சி துறை உயர் அலுவலர்கள் விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு கால கட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரு நல்வாய்ப்பு