தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதையடுத்து, அதிமுகவின் முதல், இரண்டாவது வேட்பாளர் பட்டியலும், பாமகவின் இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அரசு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த அரசுக்கு எதிர்ப்பலைகள் இல்லை" என்று தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல் குறித்த கேள்விக்கு, "அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகினாலும் எந்த இடத்திலும் இதுவரை பாமக, தேமுதிகவை விமர்சிக்கவில்லை. தேமுதிக விலகியதுக்கு பாமக காரணமில்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் நேரங்களில் இலவசங்கள் வழங்கப்படுவதை பாமக எதிர்த்து வந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இருப்பினும் பெண்களின் இன்னல்களை போக்கும் வகையில் ஆறு சிலிண்டர் வழங்கும் அதிமுகவின் அறிவிப்பை பாமக வரவேற்கிறது" என்றார்.