இந்தியாவில் கரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வினை நடத்துவது சாத்தியமில்லாததால், இந்தாண்டு அந்தந்த மாநிலங்களே நீட் நுழைவுத் தேர்வினை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”இந்தியாவில் 435 மருத்துவ கல்லூரிகளில் 41ஆயிரம் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள், 500 தனியார் மருத்துவ நிறுவனங்களில் 9 ஆயிரத்து 700 மருத்துவ பட்ட மேற்படிப்பு (டி.என்.பி) இடங்கள் உள்ளன. இவற்றில் சேர முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் நடைபெறும். அதேபோல் இந்தாண்டும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி நீட் தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் முதுகலை நீட் நுழைவுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் தேர்தல் பரப்புரைகளும், கும்ப மேளாக்களும் நடந்து கொண்டுதான் இருந்தன.
ஏறத்தாழ 1.6 லட்சம் மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் சேர்ந்திட தயாராக இருந்தனர். ஆனால், மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மை, தொலைநோக்குப் பார்வையின்மையால் தற்போது முதுநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்காக தயாராகி வரும் இளம் மருத்துவர்கள் கரோனா தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும். ஆனால், அதைச் சரியான நேரத்தில் செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. இந்த தவறான நடவடிக்கைகளால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெருந்தொற்று, தேசிய அளவில் நுழைவுத் தேர்வை நடத்துவதில் சிரமங்களை உருவாக்கும் எனக் கருதினால், இந்த ஆண்டிற்கு மட்டுமாவது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த மாநில அரசுகளே நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அந்த நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் அகில இந்தியத் தொகுப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தோராயமாக 18 ஆயிரம் மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுகின்றனர். எனவே தமிழக அரசே தனியாக நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும். இத்தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவ நிறுவனாங்களில் உள்ள ஏறத்தாழ 8 ஆயிரத்து 500 மருத்துவ மேற்படிப்பு இடங்களை உடனடியாக நிரப்பிக் கொள்ள முடியும். போதிய இளம் மருத்துவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த முடியும்.
தமிழ்நாட்டில் புதியதாக பதவி ஏற்கும் அரசு முதலில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவப்படிப்பினை முடித்துள்ள மாணவர்களுக்கு தேர்வினை நடத்தி, அவர்களை உரிய சம்பளத்துடன் பணியில் அமர்த்த வேண்டும். நாடு முழுவதிலும் கரோனா சிகிச்சைக்குரிய மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும், தடுப்பூசிகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளில் போலி, கலப்பட மருந்துகளும் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இவற்றை தடுத்திட உடனடி நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். ரெம்டெசிவிர் மருந்தை அரசே தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக வழங்கிட வேண்டும்.
எச்.எல்.எல் பயோ டெக் நிறுவனத்தில் தடுப்பூசி
செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோ டெக் நிறுவனம் மூலம் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும். 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்த சுமார் 12.5 கோடி கரோனா தடுப்பூசி மருந்துகள் தேவை. இதுவரை நான்கு மாதமாக வெறும் 60 லட்சம் தவணை தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 45 லட்சம் பேர் இரண்டாவது தவணைக்காக தடுப்பூசி இன்றி காத்திருக்கின்றனர்.
கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை அந்நிறுவனங்களிடமிருந்து முறையே ரூ. 300, ரூ. 400 என்ற விலைகளை கொடுத்து எட்டு கோடி தவணைகள் வாங்க சுமார் ரூ. 2 ஆயிரத்து 400 கோடி முதல் ரூ. 3 ஆயிரத்து 200 கோடி வரை செலவாகலாம். உடனடியாக நமக்கு அவ்வளவு தவணைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. எனவே கோவாக்சின் தடுப்பூசியை தமிழ்நாடு அரசே சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் நிறுவனம்’, செங்கல்பட்டிலுள்ள எச்எல்எல் பயோ டெக் ஆகிய நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்வதே நல்லது. அதன் மூலம் குறைந்த விலையில், தேவையான மருந்தை குறுகிய காலத்திற்குள் உற்பத்தி செய்திட முடியும்.
எனவே தமிழ்நாடு அரசே அந்நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து பெற்று, கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் அந்த பொதுத்துறை நிறுவனத்தை காப்பதுடன் மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள், இதர தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்திட முடியும். இதன் மூலம் தமிழ்நாடு மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு வணிக அடிப்படையில் விற்கவும் முடியும்.
மருத்துவ நிபுணர்குழுவை செழுமைப்படுத்தி நன்கு செயல்படச் செய்ய வேண்டும். அதைப் போலவே பல்துறையினரின் நிபுணர் குழுக்களை தனித்தனியாக அமைத்து, அவர்கள் ஆலோசனையுடன் கரோனாவால் ஏற்படக்கூடிய துறை சார்ந்த பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும்.
14 நாட்கள் முழு ஊரடங்கு தேவை
தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் கரோனா மிக வேகமாகப் பரவுகிறது. தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சத்தை தொட்டுவிட்டது. 23க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
அதைத் தடுப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம். அனைவரின் வாழ்வாதாரத் தேவைகளையும் நிறைவு செய்தலுடன் கூடிய பொதுமுடக்கம் கரோனா பரவலின் வேகத்தை மட்டுப்படுத்த உதவும். எனவே, குறைந்த பட்சம் 14 நாட்களுக்காவது பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கரோனா நிவாரண நிதியாக ரூ. நான்காயிரத்தை உடனடியாக அனைத்து குடும்ப அட்டைதாரரர்களுக்கும் வழங்கிட வேண்டும்” என்றார்.